Latestமலேசியா

பிரதமர் அன்வாரின் மனப்பூர்வமான மன்னிப்பை ஏற்றுக்கொள்வோம்; இந்தியச் சமூகத்துக்கு ராயர் அழைப்பு

கோலாலம்பூர், ஜூலை.30- இந்து ஆலயங்கள் குறித்து கடந்த காலத்தில் தாம் கூறிய நோக்கமில்லாத கருத்துகளுக்காக இந்தியச் சமூகத்தினரிடம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளதை ஜெலுதோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வரவேற்றுள்ளார். மன்னிப்பு கோருவதில் உள்ள தமது நேர்மையை வெளிப்படுத்தும் விதமாக நேற்று நெகிரி செம்பிலானில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போது பிரதமர் கைகளைக் கூப்பி வணங்கினார்.

தமது Reformasi இயக்கத்திற்கு இந்தியச் சமூகம் அளித்த மகத்தான ஆதரவை பிரதமர் மதிப்பதையும், அந்த ஆதரவே அவரை நாட்டின் தற்போதைய பிரதமராக உயர்த்தியது என்பதை அவர் உணர்ந்திருப்பதையும் அவரது பகிரங்க மன்னிப்பு தெளிவாகக் காட்டுகிறது. அதே சமயம் பிரதமரான பிறகு இந்தியச் சமூகத்தினரைப் புண்படுத்தியிருக்கக்கூடிய தமது கருத்துகளையும் அவர் உணர்ந்துள்ளார் என ராயர் கூறினார்.

கடந்த காலங்களில், குறிப்பாக முந்தைய Barisan Nasional அரசாங்கத்தின் கீழ் ‘ஹிண்ட்ராஃப்’ (HINDRAF) இயக்கம் செயல்பட்டபோது இந்தியச் சமூகம் பல குறைகளை எழுப்பியிருந்த நிலையில், பதவியில் இருந்த எந்தவொரு பிரதமரும் இவ்வாறு செய்ததில்லை. அவ்வகையில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று என பினாங்கு இந்து அறக்கட்டளை வாரியத் தலைவருமான ராயர் குறிப்பிட்டார்.

இந்து ஆலயங்கள் குறித்து தவறுதலாகவோ அல்லது அறியாமலோ கருத்தைச் சொல்லியிருந்தாலும், அதை வெளிப்படையாக ஒப்புக் கொண்டு மன்னிப்பு கோரவும், அக்கூற்றைத் திரும்பப் பெறவும் தயாராக இருப்பதை பிரதமர் நிரூபித்துள்ளார்.

கடந்த கால கசப்புகளை மறந்து மன்னித்து, பிரதமர் தனது மன்னிப்புக் கோரலில் காட்டிய பெருந்தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் இதுவென ராயர் சுட்டிக் காட்டினார். மேலும் MADANI அரசாங்கம் மட்டுமே ஒரே நம்பிக்கையும் முன்னேற்றத்திற்கான வழியாகும் என்பதையும் உணர வேண்டும் என்றாரவர்.

Madani நிர்வாகத்தின் கீழ், முஸ்லிம் அல்லாத வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்க, மொத்தம் 200 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. SPM தேர்வில் சிறப்பாகத் தேர்ச்சி பெறும் இந்திய மாணவர்களுக்கு உள்ளூர் பல்கலைக்கழகங்களில் மெட்றிகுலேஷன் கல்வி வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. Madani அரசாங்கத்தில் Gobind Singh, Datuk Seri R. ரமணன் ஆகிய இரு இந்தியப் பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளதை ராயர் சுட்டிக் காட்டினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!