Latestமலேசியா

பிரிவினைவாதத்தை தூண்டவில்லை; தானா மலாயு கருத்துக்களைத் தற்காக்கும் சனூசி

சிரம்பான், ஜூலை.30-கெடா மந்திரி பெசார் சனூசி நோர், Tanah Melayu வரலாறு குறித்த தனது கருத்துக்களை மீண்டும் தற்காத்துப் பேசியிருக்கிறார். சினத்தையும் தவறான புரிதலையும் ஏற்படுத்தும் நோக்கில் சில தரப்பினர் அவற்றைத் திரித்துக் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

நாட்டின் வரலாற்றை மக்களுக்கு நினைவூட்ட மட்டுமே செய்ததாகவும், எந்தவொரு சமூகத்தையும் அவர்களின் பூர்வீக நாட்டிற்குத் திரும்புமாறு வலியுறுத்தவில்லை என்றும் சனூசி தெளிவுபடுத்தினார்.

வரலாற்றை உண்மையான ஒன்றாக ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது புதிராக இருக்கிறது. இந்த நிலப்பகுதி மலாய் மக்கள் குடியமர்ந்திருந்தது. இது Tanah Melayu என்று அழைக்கப்பட்டது. இதைக் கூடவா மக்கள் புரிந்து கொள்ள இயலவில்லை என நேற்றிரவு சிரம்பானில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தேர்தல் இயக்குனருமான சனூசி கூறினார்.

கடந்த கால நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். நிகழ்காலத்தை மதிப்பிட வேண்டும். எதிர்காலத்தைத் திட்டமிட வரலாற்றை ஆராய வேண்டும். அதோடு நாட்டின் பல்லினச் சமூகத்தை ஏற்றுக் கொள்வதில் முந்தைய தலைமுறையினர் காட்டிய பரந்த மனப்பான்மையைப் பாராட்டுவது அவசியம் என அவர் வலியுறுத்தினார்.

தனது கருத்துகள் இனவாதத்தனமாக இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்த சனூசி, கெடாவில் உள்ள PN நிர்வாகம் அனைத்து சமூகங்களின் நலன்களையும் தொடர்ந்து கவனித்து வருவதைச் சுட்டிக் காட்டினார்.

மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களைத் தங்களது தாயகங்களுடன் தொடர்புப்படுத்தி கருத்துகள் வெளியிட்டடு சனூசி முன்னதாக சர்ச்சையை ஏற்படுத்தினார்.
மலேசிய சீனர்கள் மற்றும் இந்தியர்களின் குடியுரிமை அல்லது உரிமைகளைச் சந்தேகத்திற்குள்ளாக்கும் நோக்கில் அக்கருத்துகளைத் தான் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதன் தொடர்பில் பல புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாகவும், சனூசி விசாரணைக்கு அழைக்கப்படுவார் எனவும் காவல்துறை கூறியிருந்தது.

அதே சமயம் பொதுக்கூட்டத்தின் போது மலாய், சீன மற்றும் இந்திய சமூகங்கள் குறித்து தாம் தெரிவித்த கருத்துகளை PKRரைச் சேர்ந்த டாக்டர் N. Sathia Prakash தவறாகச் சித்தரித்ததாகக் கூறி, அவர் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக சனூசி மிரட்டல் விடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!