
சாவ் பாவ்லோ, ஜூன்-14 – பிரேசிலில் பாதுகாப்பு கயிறு கட்டப்படாமலேயே, Bungee Jumping போன்ற சாகச விளையாட்டுக்காக 21 வயது இளம் பெண் ஒருவர் பாலத்தில் இருந்து தள்ளிவிடப்பட்டு உயிரிழந்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாவ் பாவ்லோ மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற Skeleton Bridge பாலத்தில் இந்த பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது.
Maria Eduarda என்ற 21 வயது பெண் ‘Rope Jumping’ சாகசத்தில் ஈடுபட முயன்றார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், அவரது உடலில் பாதுகாப்பு கயிற்றை (Safety Cord) சரியாக பொருத்த மறந்துவிட்டனர்.
எதிர்பாராதவிதமாக, கயிறு இணைக்கப்படுவதற்கு முன்பே அவர்கள் அந்தப் பெண்ணை 130 அடி உயரப் பாலத்திலிருந்து கீழே தள்ளிவிட்டனர்.
பாதுகாப்பு கயிறு இல்லாததால், அவர் நேரடியாக கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தக் கொடூரக் காட்சி அங்கிருந்தவர்களின் கைப்பேசியில் பதிவாகி, தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக, சாகச நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு பெண் உட்பட 6 பேரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
அதோடு, அலட்சியமாக செயல்பட்ட ஊழியர்கள் மீது கொலை வழக்குப் பதிவுச் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



