
கோலாலம்பூர், நவ 13-நான்கு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் சமைக்கப்படாத கோழி இறைச்சி நிரம்பிய கூடைகள் மூடப்படாமல் கொண்டு செல்லப்பட்டது தொடர்பான காணொளி, பொதுமக்களிடையே உணவுப் பாதுகாப்பு மற்றும் ஹலால் விதிமுறைகள் குறித்த கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அக்காணொளியை Threads தளத்தில் acsoneg02 என்ற பயனர் பதிவேற்றியிருந்தார். இன்று காலை Pantai Dalam அருகே உள்ள NPE நெடுஞ்சாலையில் அது பதிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டிருந்தார். திறந்த கூடைகளில் கோழி இறைச்சி கொண்டு செல்லப்பட்டதைக் கண்டு தாம் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, இறைச்சியைக் கையாளும் முறைகள் குறித்து சில சமூக ஊடகப் பயனர்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர். இறைச்சியின் பாதுகாப்பு குறித்து சந்தேகம் எழுவதால், தாமே கோழிகளை அறுத்துப் பதப்படுத்துவதாக பயனர் ஒருவர் குறிப்பிட்டார்.
முறையான அடையாளக் குறியீடுகள் இல்லாத கோழி இறைச்சியை வாங்குவதைத் தவிர்த்து, விலை சற்று கூடுதலாக இருந்தாலும் நம்பகமான ஹலால் சான்றிதழ் கொண்ட நிறுவனங்களின் தயாரிப்புகளைத் தேர்வு செய்யுமாறு சிலர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும், சம்பந்தப்பட்ட வாகனத்தின் உரிமையாளரைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஊடகப் பயனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, வாகனப் பதிவு எண் மூலம் அது நிறுவனத்திற்குச் சொந்தமானதா அல்லது தனிநபருடையதா என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் அதற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



