
ஷா ஆலாம், மார்ச்-2 – மே மாத பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் அதன் நடப்புத் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி பதவியைத் தற்காத்துக் கொள்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
கட்சித் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமே, ரஃபிசி அப்பதவியில் தொடர வேண்டுமென விருப்பம் தெரிவித்துள்ளதே அதற்குக் காரணம்.
பொருளாதார அமைச்சருமான ரஃபிசி, தமது நம்பிக்கைக்குரியவர் எனக் குறிப்பிட்ட அன்வார், தனது பொறுப்புகளையும் கடமைகளையும் தொடர்ந்து ஆற்றி வர ரஃபிசிக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென்றார்.
“ரஃபிசியின் பாதையை எளிதாக்குவோம்” என, அவருக்கு போட்டி வேண்டாம் என்பதை அன்வார் சூசகமாகக் கூறினார்.
சிலாங்கூர் பி.கே.ஆர் பொதுப் பேரவையில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.
இதனிடையே, கட்சியின் 7 உதவித் தலைவர்களுக்கான போட்டி இம்முறை சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகக் கடைசியாக, இயற்கை வளம் மற்றும் சுற்றுச் சூழல் நிலைத்தன்மைக்கான அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட், உதவித் தலைவர் பதவியைத் தற்காக்கப் போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மற்றொரு நடப்பு உதவித் தலைவரான சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியும் பதவியைத் தற்காத்துக் கொள்ளப் போட்டியிடுகிறார்.