
பத்து பஹாட், ஜூலை-10 – பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தனது சொந்த பயன்பாட்டுக்காக புதிய ஆடம்பர BMW காரை வாங்கியதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் பொய்யான தகவல்களை முற்றிலுமாக மறுத்துள்ளார்.
ஜோகூர் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக பத்து பஹாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், தான் எந்த புதியக் காரையும் வாங்கவில்லை என திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
அது ஒரு பழைய வாகனம் என்றும், வேண்டுமென்றே பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் அவர் சாடினார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் மற்றும் விழா மற்றும் அனைத்துலக மாநாட்டுச் செயலகப் பிரிவான BIUPA ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளது.
அந்த BMW கார், அரசாங்கத்தின் வசமுள்ள பழைய வாகனம் மட்டுமே என்றும், அது புதிய கொள்முதல் அல்ல என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
தவிர, தற்பொழுது பிரதமர் பயன்படுத்தும் Mercedes Benz கார், மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் வழங்கிய அன்பளிப்பாகும்; அது கூட தனது தனிப்பட்ட பெயரில் அல்லாமல் பிரதமர் துறை அமைச்சின் பெயரிலேயே பதிவுச் செய்யப்பட்டுள்ளதாகவும் அன்வார் விளக்கமளித்தார்.
மக்கள் பணத்தை மோசடி செய்யும் மற்றவர்களைப் போல தான் இல்லை என்றும், அதிகாரபூர்வமான பணிகளுக்காகவே இந்த வாகனங்கள் பயன்படுத்தப்படுவதாகவும் பிரதமர் தனது உரையில் அழுத்தமாகக் குறிப்பிட்டார்.



