
சிலாங்கூர், பூச்சோங் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் நீண்டகால இடமாற்றக் கனவை நனவாக்கும் வகையில், மாற்றுப் புதிய பள்ளி முழுமைக் கட்டடக் கட்டுமானத்திற்கான அதிகாரப்பூர்வ அனுமதி கடிதத்தைக் கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ இன்று நேரில் வழங்கிச் சிறப்பித்துள்ளார்.
பிற்பகல் 3 மணியளவில் பள்ளிக்கு அதிகாரப்பூர்வ அலுவல் வருகை மேற்கொண்ட துணை அமைச்சர், தற்போதைய பள்ளியின் உள்கட்டமைப்பு மற்றும் வகுப்பறை நெருக்கடிச் சூழல்களை நேரில் பார்வையிட்டார்.
தொழிற்சாலைப் பகுதியில் பள்ளி அமைந்துள்ளதால் ஏற்படும் இரைச்சல் மற்றும் இடநெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த இடமாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆண்டு முதல் பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பொது மக்கள் இணைந்து மேற்கொண்ட தொடர் முயற்சிகளுக்குக் கிடைத்துள்ள இந்த வெற்றி, மலேசியத் தமிழ்க் கல்வி வரலாற்றில் ஒரு முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
தொழிற்சாலை சத்தங்களுக்கு மத்தியில் பிள்ளைகள் படும் அவதிக்கு இன்றுடன் விடிவுகாலம் பிறந்துள்ளதாக,
தலைமையாசிரியர் உஷா தேவி சேகரன் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
புதிய வளாகத்தில் 36 வகுப்பறைகளுடன், சுமார் 2,000 மாணவர்கள் பயிலும் வகையில் அதிநவீன டிஜிட்டல் மற்றும் AI தொழில்நுட்ப வகுப்பறைகள் உருவாக்கப்படவுள்ளதாகவும் அவர் சொன்னார்.
2027 புதிய கல்வி முறைக்கு வித்திடும் வகையில், AI தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த புதிய பள்ளி அமையவுள்ளது.
கடந்த 4 வருடங்களாகப் பல சவால்களைத் தாண்டி இன்று இந்த வெற்றியை அடைந்துள்ளதாக, பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் குமார் சுப்ரமணியம் தெரிவித்தார்.
பிள்ளைகளின் எதிர்காலக் கல்விக்குத் தரமான உள்கட்டமைப்பு மிக அவசியம் என்பதை உணர்ந்து ஆதரவளித்த அனைத்துத் தரப்பினருக்கும் அவர் நன்றிக் கூறினார்.
பூச்சோங் காசல்ஃபீல்டு தமிழ்ப்பள்ளியின் இந்த நவீன புதிய கட்டடத் திட்டம், எதிர்காலத்தில் மற்ற தமிழ்ப்பள்ளிகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாகத் திகழும் எனத் துணை அமைச்சர் வோங் கா வோ உறுதிப்படத் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கு வருகைத் தந்திருந்த பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகத் தலைவர்கள், தமிழ்க் கல்வி ஆர்வலர்கள், தமிழ்ப் பற்றாளர்கள் முகத்தில் இந்நிகழ்ச்சி பெருமகிழ்ச்சியையும் ஆத்ம திருப்தியையும் புலப்படுத்தியது.



