
ஷா ஆலாம், செப்-11-சிலாங்கூர், சுபாங் ஜெயாவில் உள்ள பல்பொருள் பேரங்காடியில் 65 பொருட்களைத் திருடியதை ஒப்புக் கொண்ட 39 வயது ஆடவருக்கு 2,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
கடந்தாண்டு டிசம்பர் 20 ஆம் தேதி 730.97 ரிங்கிட் மதிப்பிலான பொருட்களைக் களவாடியதாக Mohd Aslizan Mustafa Maarof மீது குற்றம் சாட்டப்பட்டது. திருடப்பட்ட பொருட்களில் கோழி இறைச்சி, குழந்தைகளுக்கான எண்ணெய், பால் பவுடர், துரித உணவுகள், கேக், பல் துலக்கும் பசை, காட்டன் பட்ஸ் ஆகியவையும் அடங்கும்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 379-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்ட அவர், அபராதத்தைச் செலுத்தத் தவறினால் 10 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் ஏழு பேர் கொண்ட குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் நபர் என்றும், அவரது குழந்தைகளில் ஒருவருக்கு ஆட்டிசம் இருப்பதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், அவர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் சிறை அல்லது தண்டனையால் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், குற்றவாளி எனத் தீர்ப்பளிக்காமல் பிணை ஒப்பந்தம் வழங்குமாறும், அது சாத்தியமில்லையெனில் சம்பந்தப்பட்ட பல்பொருள் பேரங்காடிக்கு இழப்பீடு வழங்க அல்லது குறைந்தபட்ச அபராதம் விதிக்குமாறு கோரப்பட்டது. எனினும் தகுந்த தண்டனையுடன், பல்பொருள் பேரங்காடிக்கு இழப்பீடு வழங்க இறுதியில் கேட்டுக் கொள்ளப்பட்டது.



