
சுபாங் ஜெயா, ஜூலை.21-Puchong Permai வட்டப்பாதையில் பொதுமக்களில் ஒருவரைத் தாக்கி விட்டுத் தப்பிச் செல்ல முயன்ற மியன்மார் ஆடவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
உள்ளூர் மக்களுக்கும் அந்தச் சந்தேக நபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு குறித்து நேற்று இரவு 11.56 மணியளவில் தங்களுக்குத் தகவல் கிடைத்ததாக Subang Jaya மாவட்டக் காவல் துறைத் தலைவர் உதவி ஆணையர் Wan Azlan Wan Mamat தெரிவித்தார்.
காவல்துறையினர் சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, பொதுமக்கள் அந்நபரைப் பிடித்து வைத்திருந்தனர்.
பிடிக்கப்பட்ட சமயம் அவர் அரை மயக்க நிலையில் இருந்தார்.
அந்நபரைச் சோதித்ததில், நாட்டில் தங்குவதற்குத் தேவையான முறையான அடையாள ஆவணங்கள் அவரிடம் இல்லை என்பது தெரிய வந்தது.
மேல் விசாரணைக்காக அவர் காவல் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அச்சம்பவம் குடிவரவுச் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக Wan Azlan கூறினார்.
பொதுமக்கள் அச்சம்பவம் தொடர்பில் ஆரூடங்களை வெளியிட வேண்டாம். அதே சமயம் தகவல் தெரிந்தவர்கள் Subang Jaya காவல் நிலையத்தைத் தொடர்பு கொண்டு விசாரணைக்கு உதவ முன் வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



