
குவாலா பிலா, அக்டோபர்-23,நெகிரி செம்பிலான், குவாலா பிலாவில் Honda City காரை ஆபத்தான முறையில் ஓட்டி, 5 வாகனங்கள் விபத்தில் சிக்கக் காரணமான ஆடவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று காலை, தஞ்சோங் ஈப்போ பகுதியில், சிரம்பான்–குவாலா பிலா சாலையின் 25-ஆவது கிலோ மீட்டரில் இச்சம்பவம் நிகழ்ந்தது.
சம்பந்தப்பட்ட Honda City கார் சாலையில் கண்மூடித்தனமாகச் சென்று, Modenas Kriss மோட்டார் சைக்கிள் உட்பட மற்ற வாகனங்களை மோதும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன.
இந்த விபத்தில் 3 கார்களும் இரண்டு மோட்டார் சைக்கிள்களும் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பந்தப்பட்ட 39 வயது கார் ஓட்டுநரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட சிறுநீர்ப் பரிசோதனையில் அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது கண்டறியப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் டத்தோ Alzafny Ahmad தெரிவித்தார்.
விபத்து தொடர்பில் போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



