Latestஉலகம்

சீனாவின் திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 16 பேர் பலி, நூற்றுக்கணக்கான வீடுகள் தரைமட்டம்

பெய்ஜிங், அக்டோபர்-23,சீனாவின் திபெத் பகுதியை 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியதில் குறைந்தது 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 32 பேர் காயமடைந்துள்ளதாக சீன அரசாங்க ஊடகங்கள் தெரிவித்தன.

காயமடைந்தவர்களில் 11 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

நேற்றிரவு உள்ளூர் நேரப்படி 10.33 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், திபெத்தின் நாக்சு (Nagqu) நகரிலிருந்து சுமார் 190 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டிருந்தது.

நிலநடுக்கத்தால் குறைந்தது 339 வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1,600-க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சில பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மலைப்பகுதிகளில் பாறைகள் சரிந்து விழுந்ததால் சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தற்காலிகக் கூடாரங்கள், படுக்கைகள் மற்றும் குளிர்கால ஆடைகள் உள்ளிட்ட அவசர உதவிப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அடுத்த சில நாட்களில் பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்பதால் மீட்புப் பணிகளில் சிரமங்கள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

திபெத் பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் பதிவான மிகக் கடுமையான நிலநடுக்கம் இதுவெனக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!