பெட்டாலிங் ஜெயா, ஜூன் 10 – ஆட்டிசம் குறைப்பாட்டால் பாதிக்கப்பட்ட சிறுவன் சையின் ரையானின் (Zayn Rayyan) தாய், தலைநகர், டமன்சாரா டாமாயிலுள்ள, அவர்களின் வீட்டிற்கு இன்று கொண்டு வரப்பட்டார்.
சையின் ரையான் கொலை சம்பவத்தின், மறுகாட்சி அமைப்பை செய்து காட்ட அவர் அங்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.
இன்று காலை மணி 10.15 வாக்கில், வெள்ளை நிற வேன் ஒன்றில் வந்திறங்கிய சையன் ரையானின் தாய், R புளோக்கிலுள்ள, வீடொன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதன் பின்னர், சையின் ரையானின் உடல் கண்டெடுக்கப்பட்ட, அந்த குடியிருப்பிலிருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும், வடிகாலுக்கும் அவர் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
போலீசார், சிறுவனின் உருவ பொம்மையை வைத்திருப்பதையும் காண முடிந்தது. எனினும், அதன் உண்மையான நோக்கம் என்ன என்பது உறுதியாக தெரியவில்லை.
விசாரணைக்கு உதவும் பொருட்டு, கடந்த வெள்ளிக்கிழமை, சையின் ரையான் பெற்றோரின் தடுப்புக் காவல், மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
அவர்கள், இம்மாதம் 13-ஆம் தேதி வரையில், மேலும் ஆறு நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுவார்கள் என, சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹுசைன் ஒமார் கான் (Datuk Hussein Omar Khan) கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.