Latestமலேசியா

மலாக்கா இறுதிச் சடங்கு விவகாரத்திற்கு நிரந்தரத் தீர்வு; ஜோகூர் மாதிரியில் அதிநவீன வளாகத்தை அமைக்க சண்முகம் தீவிரம்

மலாக்கா, ஜூன்-9-மலாக்காவில் உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடத்தப்பட்டதாகக் கூறி, இந்து சமய இறுதிச் சடங்கு ஒன்று அதிகாரிகளால் நிறுத்தப்பட்டதோடு, தலைமைப் பூசாரிக்கு மலாக்கா நகராண்மைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலாக்காவில் நடைபெற்ற இந்த பாரம்பரிய இறுதிச் சடங்கின் போது, பொது இடப் பயன்பாடு மற்றும் நகராண்மைக் கழகத்தின் சுகாதார விதிமுறைகள் மீறப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து அதிகாரிகள் இச்சடங்கை நிறுத்த உத்தரவிட்டனர்.

மேலும், உரிய அனுமதியின்றி இப்பகுதியைப் பயன்படுத்தியதற்காக, சம்பந்தப்பட்ட ஆலயத்தின் தலைமைப் பூசாரிக்கு விளக்கக் கடித நோட்டீஸும் வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் சமுதாயத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள வேளையில், தனியார் நிலத்தில் அதுவும் உரிய அனுமதியின்றி சடங்குகளை நடத்தியதன் விளைவாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மலாக்கா மாநில சமூக நலன், இளைஞர், விளையாட்டு மற்றும் அரசு சாரா நிறுவனங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ வி.பி. சண்முகம் விளக்கியுள்ளார்.

இந்நிலையில், இதுபோன்ற சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கில் மலாக்கா மாநில அரசு ஏற்கனவே தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர் சொன்னார்.

இதன் ஒரு பகுதியாக, சண்முகம் மற்றும் மூத்த ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ராய்ஸ் யாசின் ஆகியோர் தலைமையில், நகராண்மைக் கழக அதிகாரிகள் உள்ளடங்கிய உயர் மட்டக் குழுவினர், ஜோகூர் தெலுக் ஜாவாவில் உள்ள அதிநவீன இந்து இறுதிச் சடங்கு வளாகத்திற்கு அண்மையில் அதிகாரப்பூர்வ வேலைத்திட்ட ஆவணப் பார்வை மேற்கொண்டனர்.

மலாக்கா அரசின் நேரடி உத்தரவின் பேரில், மலாக்கா மாநில இந்து சமுதாயத்திற்கு மிகவும் முறையான, சுகாதாரமான மற்றும் அனைத்து வசதிகளும் கொண்ட ஓர் இறுதிச் சடங்கு வளாகத்தை உருவாக்குவதற்கான வடிவமைப்பு, மேலாண்மை மற்றும் கட்டுமான மாதிரிகளைச் சேகரிக்கும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

பொது இடங்களில் ஏற்படும் இத்தகைய தற்காலிக அசௌகரியங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மலாக்கா மக்களின் நீண்டகாலத் தேவையைப் பூர்த்தி செய்யும் இந்த நவீன வளாகத் திட்டம் விரைவில் மாநில அரசின் மூலம் சாத்தியமாக்கப்படும் என சண்முகம் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!