
கோலாலாம்பூர், ஜூன்-9-பல்லின சமூகத்திடையே ஒற்றுமையை வலுப்படுத்தவும், உணர்வுப்பூர்வமான விவகாரங்களைத் தரவுகளின் அடிப்படையில் கையாளுவதற்கும் PRISMA எனும் புதிய தேசிய ஒருமைப்பாட்டு மையம் அமைக்கப்படவுள்ளது.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ ஃபாடில்லா யூசோஃப் தலைமையில் இன்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டின் முதலாவது தேசிய ஒருமைப்பாட்டு ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இம்முடிவு உறுதியானது.
சமூக ஊடகங்களின் வழி பரப்பப்படும் வதந்திகள் மற்றும் டிஜிட்டல் சவால்களுக்கு மத்தியில் தேச ஒற்றுமையைப் பாதுகாக்க, சமுதாய உணர்வுப்பூர்வ விவகாரங்களுக்கான PRISMA குறிப்பு மையம் தோற்றுவிக்கப்படவுள்ளது.
இதனிடையே, நாட்டின் நிலைத்தன்மைக்கு அடிப்படையான ருக்குன் நெகாரா கோட்பாடுகளை மக்கள் அனைவரும் உள்வாங்க வேண்டும் என்ற மாமன்னரின் கட்டளையை இக்கூட்டம் மனதார வரவேற்றது.
இவ்வேளையில், இளைய தலைமுறையினரின் தேசப்பற்றை உறுதிச் செய்ய, வரும் 2026/2027 கல்வி ஆண்டு முதல் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் புதிய ஒருமைப்பாட்டு பாடத்திட்டங்கள் முழுமையாக அமுல்படுத்தப்படும் எனத் தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டாகாங் தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஒரு வியூகச் சொத்தாகப் பாதுகாப்பதில் அரசாங்கம் எப்போதும் உறுதியாக இருக்கும் எனவும் அவர் சொன்னார்.



