
கோலாலம்பூர், அக்டோபர் 27 – மலேசியாவில் பரிசோதிக்கப்பட்ட வர்ணங்களில் நான்கில் ஒன்று, அனுமதிக்கப்பட்ட 90 பிபிஎம் அளவைவிட அதிக ஈயத்தைக் கொண்டிருப்பதாக ஈயத்தின் பாதிப்பைத் தடுக்கும் அமைப்பான LEEP வெளியிட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
31 உற்பத்தியாளர்களில் கிட்டத்தட்ட பாதிப் பேர், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக ஈயம் கொண்ட வர்ணங்களை விற்பனை செய்துள்ளனர். அதிகபட்சமாக 99,000 பிபிஎம் ஈயம் கண்டறியப்பட்டுள்ளது. இது அனுமதிக்கப்பட்ட அளவைவிட 1,100 மடங்கு அதிகமாகும். மேலும், அதிக ஈயம் கொண்ட வர்ணங்களில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டவற்றின் டின்களில் அது குறித்த தகவல்கள் இடம்பெறவில்லை.
ஈயத்தின் தாக்கம் குழந்தைகளுக்கு நிரந்தர மூளைப் பாதிப்பையும், பெரியவர்களுக்கு உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களையும் ஏற்படுத்தக்கூடும்.
இதையடுத்து, அலங்கார வர்ணங்களில் ஈயத்தின் அளவை 90 பிபிஎம்மாகக் கட்டுப்படுத்தும் MS 2762 தரநிலையை மலேசியாவில் கட்டாயமாக்க வேண்டும் என LEEP, பினாங்கு பயனீட்டாளர் சங்கம் மற்றும் மலேசிய வர்ண உற்பத்தியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளன.



