
ஆயர் குரோ, ஆகஸ்ட்-15,பல்கலைக்கழக மாணவர் இயக்கங்களுக்கு முழுமையான ஜனநாயக சுதந்திரத்தை வழங்கும் நோக்கில், 1971-ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் மற்றும் பல்கலைக்கழகக் கல்லூரிகள் சட்டமான AUKU இரத்துச் செய்யப்படும் என, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.
மலாக்கா, ஆயர் குரோவில் நடைபெற்ற பி.கே.ஆர் தேசிய மாநாட்டின் தொடக்க உரையில் பிரதமர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.
இச்சட்டத்தில் இதற்கு முன்னர் பல திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், முழுமையான சுதந்திரம் கோரி மாணவர் அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை மனுக்களைச் சமர்ப்பித்து வந்ததை அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே, இளைஞர்களின் தலைமைத்துவத்தை மேம்படுத்தவும், பல்கலைக்கழக வளாகங்களில் அரசியல் மற்றும் ஜனநாயக விழிப்புணர்வை சுதந்திரமாக வளர்க்கவும் இந்தச் சீர்திருத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இச்சட்டத்தை முறையாக இரத்துச் செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் புதிய வரைவுத் திட்டங்கள் விரைவில் உயர்கல்வி அமைச்சினால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை மீட்டெடுப்பதற்கான சீர்திருத்த நடவடிக்கையாக இந்த முக்கிய முடிவு பார்க்கப்படுகிறது.



