
புத்ராஜெயா, ஜூலை-8 – சாலைப் போக்குவரத்து இலாகா முகப்பிடத்தில் ஊழியர் ஒருவருடன் பொது மக்களில் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகச் சமூக ஊடகங்களில் பரவி வரும் வைரல் வீடியோ முற்றிலும் போலியானது என JPJ தெளிவுப்படுத்தியுள்ளது.
மதிய உணவு மற்றும் ஓய்வு நேரம் முடிந்த பிறகும் JPJ ஊழியர்கள் பணிக்குத் திரும்பாமல் ஓய்வெடுத்துக் கொண்டிருந்ததாக அந்த வீடியோவில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இது குறித்துத் துறை ரீதியாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், குறிப்பிட்ட அந்த வீடியோ AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டு, பொது மக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும் உள்நோக்கத்தோடு பரப்பப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, சமூக ஊடகப் பயனர்கள் இத்தகைய உண்மைக்குப்புறம்பான காட்சிகளைப் பகிருவதையோ அல்லது அவற்றுக்குக் கருத்துத் தெரிவிப்பதையோ தவிர்க்க வேண்டும் என JPJ தனது அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அரசாங்க இலாகாக்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், பொது அமைதியைக் குலைக்கும் வகையிலும் பரப்பப்பட்டுள்ள அந்த வீடியோ குறித்து, MCMC எனப்படும் தொடர்பு-பல்லூடக ஆணையத்திடமும் JPJ புகாரளித்துள்ளது.
இந்நிலையில், பொது மக்கள் தங்களின் சேவைகள் தொடர்பான சந்தேகங்களுக்குச் சமூக ஊடக வதந்திகளை நம்பாமல், துறையின் அதிகாரப்பூர்வ தளங்களை மட்டுமே நாடுமாறும் அது அறிவுறுத்தியது.



