கோலாலம்பூர், டிசம்பர்-12, நாடு முழுவதும் தனது கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை குறிப்பாக முக்கியப் பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை, KPM எனப்படும் கல்வி அமைச்சு கடுமையாகக் கருதுகிறது.
எனவே, பணி நியமனத் தரப்பான பொதுச் சேவை ஆணையம் மற்றும் சம்பந்தப்பட்ட இதரத் தரப்புகளான பொதுச் சேவைத் துறை, நிதியமைச்சு ஆகியவற்றுடன் KPM வியூக ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது.
அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) அவ்வாறு கூறியுள்ளார்.
தகுதிப் பெற்ற மேலும் ஏராளமானோர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட ஏதுவாக, பல வழிமுறைகளுக்கு இணக்கம் காணப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அவ்வகையில், குறுகியக் காலத் தீர்வாக, முக்கியப் பாடங்கள் வாரியாக ஆசிரியர் நியமனத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது;
தவிர, தனியார் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களில் தகுதியானவர்களுக்கும், ஆசிரியர் வேலை வாய்ப்பு விரிவுப்படுத்தப்படுவதாக அவர் சொன்னார்.
கல்வித் துறையில் பட்டப் பெறாத பட்டதாரிகளை, CoS எனும் சேவை ஒப்பந்த முறையில் ஆசிரியர் பணியிலமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றார் அவர்.
மக்களவையில், பேராக், பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் V.சிவகுமார் கேட்டக் கேள்விக்கு ஃபாட்லீனா பதிலளித்தார்.
கல்வி அமைச்சு இவ்வாண்டு நாடு முழுவதும் ஆரம்ப மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் 13,749 புதிய ஆசிரியர்களை வேலைக்கமர்த்தியுள்ளது.
செப்டம்பர் 30 வரைக்குமான நிலவரப்படி, ஆசிரியர்களின் பணியமர்வு 416,260 பேர் அல்லது 96.18 விழுக்காடாக உள்ளதாகவும் அவர் சொன்னார்.