Latestஇந்தியா

முதல் ‘ரோபோ’ யானையை பெற்றது தமிழகம் ; நீலகிரி கோவிலில் இயந்திர யானையுடன் பக்தர்கள் ‘செல்பி’

தமிழ்நாடு, மார்ச் 15 – இந்தியா, தமிழகம், நீலகிரி மாவட்டம், கூடலூரிலுள்ள, தேவர் சோலை சிவன் கோவிலுக்கு, இயந்திர யானை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.

கோவில்களில் யானைகள் சுகாதாரமற்ற முறையிலும், மனிதாபிமானமற்ற முறையிலும் பராமரிக்கப்படுவது குறித்து அடிக்கடி முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில், ஏற்கனவே கேரளா முழுவதுமுள்ள கோவில்களுக்கு இயந்திர யானைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ள வேளை ; தமிழகத்தில் உள்ள கோவில் ஒன்றுக்கு வழங்கப்பட்டிருக்கும் முதல் இயந்திர யானை அதுவாகும்.

அதனை தொடர்ந்து, அக்கோவிலில் உயிருள்ள யானைக்குப் பதிலாக அந்த இயந்திர யானையை முன்னிறுத்தியே பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

“ஆசிய யானைகளுக்கான குரல்” எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அந்த யானையை கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.

பார்ப்பதற்கு உயிருள்ள யானை போல் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த யானையின் காதுகளும், கண்களும் சொந்தமாக அசைகின்றன.

அதோடு வால் ஆட்டி, தும்பிக்கையை தூக்கி நீரையும் அந்த இயந்திர யானை பீய்ச்சி அடிக்கிறது.

கோவிலுக்கு வரும் பக்தர்கள் அந்த இயந்திர யானையை வியப்பாக பார்ப்பதுடன், தொட்டும் வணங்குகின்றனர்.

பலர் அந்த யானையுடன் செல்பியும் எடுத்துக் கொள்கின்றனர்.

கோவிலில் உயிருள்ள யானைகளை வைத்து என்னென்ன பூஜைகள் செய்யப்படுமோ, அவை அனைத்தும் அந்த இயந்திர யானையை வைத்தும் நடத்தப்படுகின்றன.

இரும்பு மற்றும் பைபர் கொண்டு, 900 கிலோகிராம் எடையிலும், 11 அடி உயரத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த இயந்திர யானைக்கு, ஹரிஹரன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!