
மும்பை, செப்டம்பர்-2-இந்தியாவில் காலாவதியான பிரபல உணவுப் பொருட்களின் உற்பத்தித் தேதிகளை மாற்றி, போலியான ஊட்டச்சத்து லேபிள்களுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்த சட்டவிரோத கும்பலை அதிகாரிகள் கண்டறிந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மும்பையில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் 80,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான 5,000-க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதில் Nestle, PepsiCo உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் மேகி, பொரித்த உருளைக் கிழங்கு, குர்குரே, மயோனிஸ் போன்ற தயாரிப்புகளும் அடங்கும்.
காலாவதியான அல்லது காலாவதியாகும் நிலையில் உள்ள பொருட்களின் பழையத் தேதிகளை இரசாயனத்தால் அழித்து, புதிய தேதிகளை அச்சிட்டு போலியான ஊட்டச்சத்து லேபிள்களை ஒட்டி வெளிநாடுகளுக்கு இக்கும்பல் அனுப்பியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sadhana Enterprises எனும் நிறுவனம் 19 ஏற்றுமதி நிறுவனங்களுக்காக இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது.
இதில் முதன்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு நேரடியாக தொடர்பில்லை எனத் தெரிவித்த அதிகாரிகள், உணவுப் பாதுகாப்பை உறுதிச் செய்ய விநியோகச் சங்கிலி கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.



