
மும்பை, மே 8 – மும்பையின் பைதோனி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரின் மரண மர்மம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தர்பூசணி பழம் சாப்பிட்டதாலே உயிரிழப்பு ஏற்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நிலையில், தடயவியல் பரிசோதனையில் அதிக நச்சுத்தன்மை கொண்ட “ஜிங்க் பாஸ்பைடு” என்ற எலி விஷமே மரணத்திற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்துல்லா டோகாடியா, அவரது மனைவி நஸ்ரீன் மற்றும் மகள்கள் ஆயிஷா, ஸைனப் ஆகியோரின் உடல் மாதிரிகளில் எலி விஷத்தின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்ரல் 25ஆம் தேதி குடும்ப விருந்தில் உறவினர்களுக்கு பிரியாணி வழங்கிய பின்னர், இரவு 1 மணியளவில் குடும்பத்தினர் தர்பூசணி சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து சில மணி நேரங்களில் நால்வருக்கும் கடுமையான வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்கள், மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்த விஷம் தவறுதலாக உட்கொள்ளப்பட்டதா அல்லது திட்டமிட்டு நடந்ததா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை தற்கொலைக்கான உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை என்றும், விஷம் உணவுக்குள் எவ்வாறு கலந்து வந்தது என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



