
ஜோகூர் பாரு, ஜூன்-25-ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட்டது அரண்மனையின் உத்தரவின் பேரில் தான் நடைபெற்றது என முன்னாள் சபாநாயகர் டத்தோ Dr முஹமட் ஃபுவாட் ஜர்காஷி முன்வைத்த குற்றச்சாட்டை, ஜோகூர் மந்திரி புசார் டத்தோ ஓன் ஹாஃபிஸ் காசி முற்றிலும் மறுத்துள்ளார்.
அம்னோவிலிருந்து உடனடியாக விலகுவதாக அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஜர்காஷி, ஜோகூர் அம்னோ, மாநில அரண்மனையின் கட்டுப்பாட்டில் இயங்குவதாகவும், அரண்மனையின் உத்தரவின் பேரில் தான் ஜூன் 1-ஆம் தேதி சட்டமன்றம் கலைக்கப்பட்டதாகவும் ஓன் ஹாஃபிஸ் தன்னிடம் கூறியதாக சமூக ஊடகங்களில் கடுமையான குற்றச்சாட்டுகளைப் பதிவுச் செய்திருந்தார்.
இது அம்னோ வட்டாரத்தை மட்டுமின்றி அரசியல் அரங்கையே அதிர வைத்துள்ளது.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் அறிக்கை வெளியிட்டுள்ள ஓன் ஹாஃபிஸ், _”ஜோகூர் இடைக்கால சுல்தான், துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அவர்களின் ஒப்புதலைப் பெற்ற பிறகே சட்டமன்றம் கலைக்கப்பட்டது. இது மாநில அரசியலமைப்புச் சட்டத்தின்படி முறையாக நடந்த ஒரு நடைமுறையே தவிர, இதில் அரண்மனையின் தலையீடோ அல்லது கட்டாய உத்தரவோ ஏதுமில்லை”_ என தெளிவுபடுத்தியுள்ளார்.
மேலும், அரண்மனை மீது வீண் பழி சுமத்தும் வகையில் இத்தகையக் கடுமையானக் குற்றச்சாட்டுகளை முன்வைத்த புவாட் ஜர்காஷிக்கு எதிராக ஜோகூர் அம்னோ சார்பில் போலீஸில் புகார் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



