Latestமலேசியா

மோசடியில் சிக்கி வாழ்நாள் சேமிப்பைப் பறிகொடுத்த தேசியப் பூப்பந்து வீராங்கனை லாய் பெய் ஜிங்

கோலாலம்பூர், ஜூன்-3 – தேசியக் கலப்பு இரட்டையர் பூப்பந்து வீராங்கனை லாய் பெய் ஜிங் (Lai Pei Jing),  மோசடி கும்பலொன்றின் வலையில் சிக்கி தனது வாழ்நாள் சேமிப்பை இழந்துள்ளார்.

அந்த சோகத்தில் தான் கடந்த சில நாட்களாக தான் வெளியில் எங்கும் தலைக் காட்டவில்லை என, 31 வயது லாய் பெய் ஜிங் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோசடியில் மொத்த சேமிப்புப் பணமும் பறிபோயிருப்பது தனிப்பட்ட முறையில் தமக்கு பெரிய இடி என வேதனையுடன் குறிப்பிட்ட அவர், தாமும் தமது குடும்பமும் அதில் இருந்து மீண்டு வர சில காலம் பிடிக்கும் என்றார்.

அதுவரை நிலைமையைப் புரிந்துக் கொண்டு தங்களைத் தனிமையில் இருக்க விடுமாறு லாய் பெய் ஜிங் அனைத்துத் தரப்பினரையும் கேட்டுக் கொண்டார்.

அதில் இருந்து மீண்டு வந்ததும், தம்மைப் போல மற்றவர்களும் ஏமாறி விடக் கூடாது என்ற நோக்கில், தாம் மோசடியில் சிக்கியது குறித்த மேல் விவரங்களைப் பகிருவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.

தனது ஜோடியான தான் கியான் மெங் (Tan Kian Meng)-குடன் உலகத் தர வரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் லாய் பெய் ஜிங், அம்மோசடி குறித்து போலீசுடன் அணுக்கமாக ஒத்துழைத்து வருவதாகவும் சொன்னார்.

தான் கியான் மெங் – லாய் பெய் ஜிங் இணை, அண்மைய சிங்கப்பூர் பொது பூப்பந்துப் போட்டியில் இரண்டாம் சுற்று வரை முன்னேறி, அதில் தோல்வியுற்றனர்.

இந்நிலையில், இவ்வாரம் ‘Super 1000 Indonesia Open’ போட்டியில் அவர்கள் பங்கேற்பது கேள்விக் குறியாகியுள்ளது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!