
கெமாமான், செப்-15–திரங்கானு, Bandar Cheneh Baru அருகே, Jalan Jerangau-Jabor சாலையின் 160ஆவது கிலோமீட்டரில் யானை மீது கார் மோதியதில் தம்பதியர் ஒருவர் காயமடைந்தனர்.
நேற்று மாலை 7.30 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், 31 வயதான Amirul Afiq Aazmiயும் 30 வயது மதிக்கத்தக்க அவரது மனைவியும் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இருப்பினும் அவர்கள் பயணித்த Perodua Ativa கார் கடுமையாகச் சேதமடைந்தது.
அவர்கள் குவாந்தானிலிருந்து கோலா திரெங்கானு நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, திடீரென சாலையைக் கடக்க முயன்ற யானை மீது கார் மோதியதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் பின்னால் வந்த Perodua Myvi காரும் தவிர்க்க முடியாமல், அவர்கள் சென்ற காரின் பின்புறத்தில் மோதியது.
காயமடைந்த தம்பதியரைப் பொதுமக்கள் காரிலிருந்து மீட்டு, கெமாமான் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு சென்றனர். காரை மோதிய யானை, கடந்த சில நாட்களாக சம்பவ இடத்துக்கு அருகில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த அதே யானையாக இருக்கலாம் என நம்பப்படுகிறது. இதனிடையே அச்சம்பவம் தொடர்பில் புகார் பெறப்பட்டதை கெமாமான் மாவட்டக் காவல் துரைத் தலைவர் Superintendan Mohd Razi Rosli உறுதிப்படுத்தியுள்ளார்.



