
சனா, செப்டம்பர்-20,சவூதி அரேபியத் தலைநகர் ரியாத் மற்றும் யான்பு (Yanbu) துறைமுக நகரிலுள்ள எண்ணெய் நிலையங்களைக் குறிவைத்து, தாங்களே ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதாக ஏமன் நாட்டு ஹூதி (Houthi) கிளர்ச்சியாளர்கள் உரிமைக் கோரியுள்ளனர்.
பாலிஸ்டிக் மற்றும் cruise ஏவுகணைகள், ஆளில்லா ட்ரோன்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி இரண்டு இராணுவ நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக ஹூதி இராணுவப் பேச்சாளர் Yahya Saree தெரிவித்தார்.
ரியாத்திலுள்ள முக்கிய மையங்களும், யான்புவிலுள்ள சவூதி அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் உள்கட்டமைப்புகளும் இதில் குறிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக, ரியாத் மன்னர் காலிட் அனைத்துலக விமான நிலையத்திற்கு அருகே உள்ள எரிபொருள் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.
அங்குள்ள எரிபொருள் தொட்டி ஒன்றில் பற்றிய தீயை, தீயணைப்புப் படையினர் விரைந்து செயல்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவத்தால் ரியாத் விமான நிலையத்தில் விமானச் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டதாக FlightRadar24 தளம் தெரிவித்தது.
எனினும், பின்னர் சேவைகள் படிப்படியாக வழக்க நிலைக்குத் திரும்பின.
இருப்பினும், ஹூதிகள் கூறியுள்ள இந்தத் தாக்குதல்கள் குறித்து சவூதி அரேபிய அதிகாரிகள் தரப்பிலிருந்து உடனடி அறிக்கை ஏதும் இதுவரை வெளியாகவில்லை.



