
லஹாட் டத்து, ஆகஸ்ட்.13-சபா, லஹாட் டத்துவில் Batu 5 Segama, Jalan Kampung Kokosசில் உள்ள culvert தயாரிப்பு ஆலை ஒன்றில், 30 டன் எடையுள்ள லாரி மற்றும் forkliftடில் தீப்பிடித்ததில் இருவர் தீக் காயங்களுக்கு ஆளாகினர்.
20 வயதுடைய நபருக்கு உடலில் 50 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. 40 வயதுடைய மற்றொருவரும் தீக் காயங்களால் பாதிக்கப்பட்டதாக லஹாட் டத்து தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் Sumsoa Rashid தெரிவித்தார்.
நேற்று பிற்பகல் 3.49 மணிக்கு அவசர அழைப்பு வந்ததையடுத்து, ஆறு பணியாளர்கள் தீயணைப்பு வாகனமொன்றில் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்தைச் சென்றடைந்ததும் 30 டன் லாரியொன்று சுமார் 70 சதவீதம் எரிந்து போயிருந்ததையும் forklift ஒன்று முற்றிலும் சேதமடைந்ததையும் அவர்கள் கண்டனர். கட்டிடமொன்று ஏறக்குறைய ஐந்து சதவீதம் சேதமடைந்திருந்ததாக அவர் விளக்கினார்.
தீயணைப்புப் படையினர் தீயணைப்பு வாகனத்திலிருந்து இரண்டு குழாய் இணைப்புகளைப் பயன்படுத்தித் தீயை அணைத்தனர். தீக் காயங்களுக்கு ஆளான இருவர் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சென்றடையும் முன்பே மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டு விட்டனர்.
மாலை 4.09 மணிக்குத் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சம்பவ இடத்தில் வேறு எந்த ஆபத்தும் இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் மற்றும் அதனால் ஏற்பட்ட மொத்த இழப்பு ஆகியவை இன்னும் கண்டறியப்படவில்லை என Sumsoa Rashid மேலும் கூறினார்.



