கோலாலம்பூர், ஏப்ரல்-23,பேராக், லூமூட்டில் உள்ள அரச மலேசியக் கடற்படைத் தளத்தில் பயிற்சியின் போது நடுவானில் இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து, மாமன்னர் கடும் அதிர்ச்சித் தெரிவித்துள்ளார்.
அதில் உயிரிழந்த அனைத்து 10 பேரது குடும்பங்களுக்கும் தாமும் பேரரசியாரும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் சுல்தான் இப்ராஹிம் அறிக்கையொன்றில் கூறினார்.
அவ்விபத்துக்கான காரணம் குறித்து முழு விசாரணை நடத்தி அறிக்கைத் தருமாறும் மலேசிய ஆயுதப்படையை மாமன்னர் உத்தரவிட்டுள்ளார்.
மே 3 முதல் 5 வரை நடைபெறவுள்ள Armada பொது தினத்தை ஒட்டி
இன்று காலை ராணுவ ஹெலிகாப்டர்கள் ஒத்திகையில் ஈடுபட்டிருந்த போது அவ்விபத்து நிகழ்ந்தது.
இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வது, முன்னதாக வைரலான 21 வினாடி காணொலியில் தெரிகிறது.
மோதிய வேகத்தில் அவையிரண்டும் தரையில் விழுந்து நொறுங்கின.
ஹெலிகாப்டர்களின் உடைந்து சிதறியப் பாகங்கள், கீழே நூற்றுக்கணக்கான TLDM வீரர்கள் அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டிருந்த சதுக்கத்துக்கு அருகே விழுவதையும் அக்கொணொலியில் காண முடிந்தது.
இவ்வேளையில், மரணமடைந்த 10 பேரில் எழுவர் ஆண்கள், மூவர் பெண்கள் என பேராக் போலீஸ் தலைவர் உறுதிப்படுத்தினார்.