Latestமலேசியா

வன்முறையை தூண்டக்கூடிய ஈராயிரத்துக்கும் அதிகமான உள்ளடக்கங்கள் ; MCMC அகற்றியுள்ளது

சைபர்ஜெயா, மார்ச் 29 – கடந்தாண்டு ஜனவரி தொடங்கி இதுவரை, சமூக ஊடகங்கள், ஸ்ட்ரீமிங் தளங்கள் அல்லது OTT ஆகியவற்றில், வெறுப்புணர்வை தூண்டக்கூடிய அல்லது 3R எனப்படும் மதம், மலாய் ஆட்சியாளர்கள் மற்றும் இனத்துவேச அம்சங்களை தொடும், மொத்தம் ஈராயிரத்து நான்கு உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளன.

அந்த உள்ளடக்கங்கள் வன்முறை மற்றும் பாகுபாட்டை தூண்டும் ஆற்றல் கொண்டவை என, MCMC – மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.

குறிப்பாக, இம்மாதம் 13-ஆம் தேதி தொடங்கி இதுவரை, 3R அம்சங்கள் தொடர்பில் வெளியிடப்பட்ட 479 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்டுள்ளதையும், MCMC சுட்டிக் காட்டியது.

அண்மைய சில காலமாக, சமூக ஊடகங்களிலும், OTT தளத்திலும், பாதகத்தை ஏற்படுத்தும் உள்ளடக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதனால், கடந்தாண்டு நெடுகிலும், அது தொடர்பான 35 ஆயிரத்து 490 உள்ளடக்கங்கள் அகற்றப்பட்ட வேளை ; இவ்வாண்டு முதல் இரு மாதங்களில் மட்டும் அந்த எண்ணிக்கை 27 ஆயிரத்து 115-ஆக பதிவாகியுள்ளதாக, MCMC தெரிவித்துள்ளது.

வெறுப்புணர்வை தூண்டும் உள்ளடக்கங்கள், மோசடி, சட்டவிரோத விற்பனை, சூதாட்டம் உட்பட இந்நாட்டிலுள்ள சமூக அமைப்புகள் அல்லது நிறுவனங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் போலிச் செய்திகளும் அதில் அடங்கும்.

அதுபோன்ற உள்ளடக்கங்களை பதிவேற்றம் செய்யும் நபர் அல்லது தரப்பினரை அடையாளம் காண, MCMC போலீசாருடனும் ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறது.

அதே சமயம், குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் 50 ரிங்கிட் வரையிலான அபராதம் அல்லது சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!