
ஹைதராபாத், மே-13-குற்றமே செய்யாமல் சிறை வாழ்க்கையை அனுபவிக்க விரும்பும் மக்களுக்காக, தென்னிந்திய மாநிலமான தெலங்கானாவின் ஹைதராபாத் சஞ்சல்குடா சிறை நிர்வாகம் ‘Feel the Jail’ என்ற புதுமையான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், பொது மக்கள் 2,000 ரூபாய் கட்டணம் செலுத்தி 24 மணி நேரம் உண்மையான கைதிகளைப் போலவே சிறையில் நேரத்தைச் செலவிடலாம்.
சிறைக்குள் நுழைந்தவுடன் அவர்களுக்குக் கைதிகளுக்கான சீருடை, தட்டு, போர்வை மற்றும் குவளை ஆகியவை வழங்கப்படும்.
உண்மையான கைதிகளுக்கு வழங்கப்படும் அதே உணவு முறையே இவர்களுக்கும் வழங்கப்படும்.
அதிகாலை 5 மணிக்கு எழுப்பப்படுவது முதல் இரவு 9 மணிக்குச் சிறைக்குள் அடைக்கப்படுவது வரை அனைத்தும் சிறை விதிமுறைப்படியே நடக்கும்.
கைதிகள் செய்யும் தோட்ட வேலை மற்றும் சுத்தம் செய்யும் பணிகளிலும் இவர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.
சிறை வாழ்க்கையின் கடினத்தன்மையைப் பொது மக்கள் உணர்ந்து கொள்ளவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே Medak மாவட்டத்தில் உள்ள பழைய சிறையில் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட்டு வரும் நிலையில், தற்போது ஹைதராபாத் சஞ்சல்குடா சிறையிலும் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது.



