Latestஉலகம்

விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் கிருமிகளை விட, மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவும் கிருமிகளே அதிகம்; அதிர்ச்சித் தகவல்

அமெரிக்கா, மார்ச் 31 – மனிதகுலத்தைத் தாக்கியப் பல்வேறு கொடிய நோய்களுக்கு மனிதன் காலங்காலமாக விலங்குகள் மீது பழி போட்டு வருவதை நாம் பார்த்து வருகிறோம்.

உதாரணத்திற்கு, AIDS நோயை உண்டாக்கும் வைரஸ் Chimpanzee குரங்களிடமிருந்து பரவியது; Covid-19 தொற்று நோய் கிருமி, வௌவால்களிடம் இருந்து பரவியது என சகட்டுமேனிக்கு நாம் கூறி வருகிறோம்.

ஆனால், விஞ்ஞானிகள் மேற்கொண்ட புதிய ஆராய்ச்சிகளின் முடிவுகள், மனிதர்களின் அக்கூற்றைப் பொய்ப்பிக்கும் வகையில் உள்ளன.

ஆம், விலங்குகள் மனிதர்களுக்குப் பரப்பும் கிருமிகளை விட, மனிதர்கள் விலங்குகளுக்குப் பரப்பும் நோய்க் கிருமிகளே அதிகம் என அந்த அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கிறது.

ஆராய்சியாளர்கள் கிட்டத்தட்ட 12 மில்லியன் வைரஸ் மரபணுக்களைப் பரிசோதித்ததில், 3,000 வைரஸ் கிருமிகள் ஓர் இனத்தில் இருந்து மற்றோர் இனத்திற்குத் தாவுவதைக் கண்டறிந்தனர்.

அதில் ஆச்சரியம் என்னவென்றால், அவ்வாறு தாவும் வைரஸ்களில் 64% மனிதனிடமிருந்து விலங்குகளுக்குப் பரவும் நோய்த்தொற்றுகள் ஆகும் ; இது Anthroponosis என்றழைக்கப்படுகிறது.

அதே, விலங்குகளிடம் இருந்து மனிதனுக்கு பரவும் Zoonosis வைரஸ் வெறும் 36% மட்டுமே என ஆராய்ச்சித் தெரிவிக்கிறது.

மனிதனிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவும் கிருமிகள் பெரும்பாலும் பூனைகள், நாய்கள் போன்ற செல்லப்பிராணிகள், பன்றிகள், குதிரைகள், மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள், கோழிகள், வாத்துகள் உள்ளிட்ட பறவைகள், சிம்பன்சிகள், கொரிலாக்கள் போன்ற காட்டு விலங்களைத் தான் அதிகம் தாக்குகின்றன.

குறிப்பாக காட்டு விலங்குகள் தான், மனிதனிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவும் கிருமிகளில் அதிகம் பாதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

சுற்றுச் சூழல் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள விலங்குகள் மீதான மனிதனின் பெரும் தாக்கத்தையே இது உண்மையில் எடுத்துக் காட்டுகிறது.

ஆக, என்னமோ மனிதகுலத்தின் அழிவுக்கே விலங்குகள் தான் காரணம் என எதற்கெடுத்தாலும் பழி போடும் மனிதர்களாகிய நமது கண்களை இந்த ஆராய்ச்சி முடிவுகள் திறக்கும் என நம்புவோம்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!