
புத்ராஜெயா, ஜூலை-11-மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC, வெளிநாட்டினர் தொடர்பான சட்டவிரோதக் கும்பலுக்கு எதிரானச் சோதனையில், சுமார் 1.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 14 வங்கிக் கணக்குகளை முடக்கியுள்ளது.
மேலும், சொகுசு வாகனங்கள், நகை மற்றும் ரொக்கப் பணம் என மொத்தம் 2.5 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குடிநுழைவுச் சட்டத்தை மீறி வெளிநாட்டினருக்குத் துணை நின்றதாக, அமுலாக்க அதிகாரிகள் மற்றும் பொது ஊழியர்கள் உட்பட 33 பேர் தற்போது தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
புத்ராஜெயா, சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மற்றும் மலாக்கா ஆகிய நான்கு மாநிலங்களில் ஒருங்கிணைந்த தேடுதல் வேட்டையின் மூலம் இவர்கள் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்டவற்றில் 10 சொகுசு கார்கள், தங்கக் காப்புகள், மோதிரங்கள் உள்ளிட்ட நகைகள், தங்கத் தகடுகள் மற்றும் விலை உயர்ந்த கைக்கடிகாரங்களும் அடங்கும்.
இந்த வழக்கு 2009 MACC சட்டத்தின் கீழ் தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக அதன் தலைமை ஆணையர் டத்தோ ஸ்ரீ அப்துல் ஹலீம் அமான் உறுதிப்படுத்தியுள்ளார்.



