
ஷா ஆலாம், ஜூன்1- ஷா ஆலம் ஸ்ரீ காளிகாம்பாள் கமடேஸ்வரர் திருக்கோவில் 9-ஆவது ஆண்டு வைகாசி திருவிழா, 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்க ஆன்மீக எழுச்சியுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நேற்று காலை ஓமம் வளர்த்தல் நிகழ்வுடன் தொடங்கிய இவ்விழாவில், பக்தர்கள் பால்குடம் எந்தி ஊர்வலமாக வந்து சிவ பெருமானுக்கும் காளிகம்பாளுக்கும் பால் அபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து கும்ப புறப்பாடு நடைபெற்று சிவ பெருமானுக்கும் காளிகாம்பாளுக்கும் கும்ப நீர் ஊற்றப்பட்டு தீபராதனை நடைபெற்றது.
விழாவில் சிவஸ்ரீ ஏ.பி. முத்துக்குமார சிவாச்சாரியார் ஆன்மீகத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
இவ்விழாவின் நெகிழ்ச்சியான நிகழ்வாக, சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனின் மருத்துவச் சிகிச்சைக்காக ஆலய நிர்வாகம் சார்பில் 500 ரிங்கிட் நிதியுதவி வழங்கப்பட்டதுடன், மாதந்தோறும் 300 ரிங்கிட் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மஹிமா தலைவர் டத்தோ என். சிவகுமார் இந்த நிதியுதவியை வழங்கியதோடு, தனிப்பட்ட முறையிலும் அச்சிறுவனுக்கு நிதியுதவியளித்தார்.
ஆலயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும், சிக்கல்களுக்கு மஹிமாவை அணுகலாம் என்றும் வலியுறுத்தினார்.
வெளிநாட்டிலிருந்து மலேசியா வரும் குருமார்களின் அர்ப்பணிப்பையும் சேவையையும் பாராட்டியதோடு, ஆலய நலன் கருதி அனைவரும் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றார்.
இவ்வேளையில், ஆலய குருக்கள் பி.ஏ.தனபாலன் பேசுகையில், வைகாசி விழாவின் சிறப்புகள் மற்றும் அதன் ஆன்மீக முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தார்.
ஆலயத்தின் வரலாறு, வளர்ச்சி மற்றும் பக்தர்களின் பங்களிப்பு குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.
மகேஸ்வர பூஜை, பிரசாத விநியோகம் வழங்கல் மற்றும் அன்னதானத்துடன் வைகாசி விசாகத் திருவிழா நிறைவுப் பெற்றது.
இந்த ஆலயம் இன்னும் 2 ஆண்டுகளில் கும்பாபிஷேகம் காணவுள்ளது குறிப்பிடத்தக்கது.



