
ஷா ஆலாம், ஆகஸ்ட் 27 – ஷா ஆலாம், செக்ஷன் U14 ஜாலான் ஹம்சா (Jalan Hamzah Seksyen U14) சந்திப்பில் பட்டாசு வெடித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், ஒரு குழுவை போலீசார் தேடி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமையன்று, மரண ஊர்வலம் ஒன்று செத்தியா ஆலாம், பிளிஸ் கார்டன் (Bliss Garden Setia Alam) மயானத்தை நோக்கிச் சென்றபோது இந்தச் சம்பவம் நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
ஷா ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி சருடின் சமா (Asisten Komisioner Sarudin Samah) கூறுகையில், சம்பவத்தில் தொடர்புடையவர்களையும் அங்கு இருந்த சாட்சிகளையும் அடையாளம் காணும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.
இவ்வழக்கு வெடிபொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் போலீசாரை தொடர்புகொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். .



