
ஸ்கூடாய், அக்டோபர் 19 – ஸ்கூடாய், ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலய இளைஞர் பிரிவும் முத்தியாரா ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களும் இணைந்து ஏற்பாடு செய்த சரஸ்வதி பூஜை, ஸ்கூடாய் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ஆலயத்தில் பக்தி பூர்வமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.


மாணவர்கள் கல்வியிலும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நடைபெற்ற இவ்விழாவில், மாநிலத் தமிழ்ப்பள்ளிக் கண்காணிப்பாளர் இரவிச்சந்திரன், பள்ளித் தலைமையாசிரியர் தமிழ்ச்செல்வி, சரிகாட் சூன் ஹீ மோட்டார் (Syarikat Soon Hee Motor) நிறுவனத்தின் அதிபர் லிம் பூன் சோவ், இளம் தொழிலதிபரும் ஆலய இளைஞர் பிரிவின் தலைவருமான பிரகாஷ், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பாலமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பித்தனர்.


மேலும், ஆலயத் துணைத் தலைவர் க. சேகரன், செயலாளர் பூபாலன், பொருளாளர் ஆறுமுகம், மலேசிய இந்து சங்கம் ஸ்கூடாய் பேரவைத் தலைவர் தொண்டர்மணி மு. மோகனதாசு, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என ஏறத்தாழ 350 பேர் இவ்விழாவில் பங்கேற்றனர்.
விழாவின் சிறப்பு அம்சமாக, ஸ்ரீராயர் நடனக்குழு மாணவர்கள் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சி பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது.


இதற்கிடையே, மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், பூஜையில் கலந்து கொண்ட மாணவர்களுக்குப் பள்ளி ஆசிரியர்கள் சார்பில் நோட்டுப் புத்தகங்கள் மற்றும் எழுதுகோல்கள் அடங்கிய அன்பளிப்புப் பைகள் வழங்கப்பட்டன. இம்முயற்சி பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.

விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் பள்ளி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆசிரியர்களின் ஒற்றுமை, சமயப் பற்று மற்றும் மாணவர்களின் நலன் மீதான அக்கறையை வெளிப்படுத்திய இவ்விழா, அனைவருக்கும் மகிழ்ச்சியையும் மனநிறைவையும் அளித்தது.



