Latestமலேசியா

அபராதத்திற்கு தீர்வுகாண போக்குவரத்து போலீஸ்காரர் 100 ரிங்கிட் பெறும் காணொளி வைரல்

கோலாலம்பூர், ஜன 29 – வேகமாக வாகனம் செலுத்திய ஒரு பிரிட்டிஷ் தம்பதியின் போக்குவரத்து குற்றத்திற்கு 100 ரிங்கிட் செலுத்தினால் உடனடியாக தீர்வுகாண முன்வந்தது குறித்த காணொளி வைரலானதை தொடர்ந்து கூட்டரசு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்படும் என புக்கிட் அமானின் போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணைத்துறையின் இயக்குநர்அஸ்மான் அஹ்மாட் சப்ரி வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்திருக்கிறார். சம்பந்தப்பட்ட பணியாளர்களின் எந்த தவறுகளையும் நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று அவர் கூறினார். 51 வினாடிகள் கொண்ட இந்த காணொளி கேம்பர்வேனில் உலகம் முழுவதும் பயணம் செய்யும் பிரிட்டிஷ் தம்பதியர் வெளியிட்ட 30 நிமிட யூடியூப் வீடியோவின் ஒரு பகுதியாகும். இதற்கு முன்னர் ட்விட்டர் என விளங்கிவந்த Xஸில் பதிவிடப்பட்ட அந்த காணொளியை 1.1 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.

ஒரு போலீஸ்காரர் அவரது முகத்தை மங்கலாக்கி அந்த தம்பதியினரிடம் அவர் வேகமாக வாகனம் ஓட்டியதற்காக குற்றப்பதிவு அனுப்பப் போவதாக கூறுவதை வீடியோ காட்டுகிறது. அவர்கள் போலீஸ் நிலையத்தில் அபராதப் பணத்தை செலுத்த தேர்வு செய்தால் அவர்களுக்கு 300 ரிங்கிட் செலவாகும் அல்லது “இங்கே செலுத்த” முடிவு செய்தால் அவர்களுக்கு 100 ரிங்கிட் செலவாகும் என அந்த போலீஸ்காரர் தெரிவிக்கிறார். இதனை அந்த தம்பதியர் ஒப்புக்கொண்டு அந்த நபருக்கு 100 ரிங்கிட் கொடுத்தனர். ஈப்போ செல்லும் வழியில் 60 கிலோமீட்டர் வேக வரம்பை மீறியதற்காக அபராதம் விதிக்கப்படும் என முதலில் கூறப்பட்டதாக அத்தம்பதியினர் தெரிவித்தனர். இது குறித்து போலீஸ் மற்றும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக பயனீட்டாளர்களில் பலர் வலியுறுத்தினர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!