Latest

அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கு நவம்பர் 2 முதல் VEP வழங்கப்படாது; சிங்கப்பூர் அரசு அதிரடி உத்தரவு

சிங்கப்பூர், மே-16,

சிங்கப்பூரில் போக்குவரத்து, வாகன நிறுத்தம் மற்றும் புகை வெளியேற்றம் தொடர்பான அபராதங்களைச் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்களுக்கான VEP எனப்படும் வாகன நுழைவு அனுமதி விண்ணப்பங்கள் மற்றும் அதன் புதுப்பித்தல்கள் இனி நிராகரிக்கப்படும்.

இப்புதிய நடைமுறை வரும் நவம்பர் 2-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வருவதாக, அந்நாட்டரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

தற்போது, அபராதம் செலுத்தாத வெளிநாட்டு வாகனங்கள் சிங்கப்பூரின் எல்லைச் சோதனைச் சாவடிகளுக்கு வரும்போது மட்டுமே நுழைவு மறுக்கப்பட்டு வருகிறது.

ஆனால், நவம்பர் 2 முதல் VEP இணையத் தளத்திலேயே அவர்களின் விண்ணப்பங்கள் முடக்கப்படும் என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சும் நிலப் போக்குவரத்து வாரியமும் கூட்டாகத் தெரிவித்துள்ளன.

எனவே, வெளிநாட்டு வாகனமோட்டிகள் சிங்கப்பூருக்குள் நுழைவதற்கு குறைந்தது 2 வாரங்களுக்கு முன்பே தங்களின் VEP விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறும், அதற்கு முன்னதாக தங்களுக்கு ஏதேனும் அபராதங்கள் நிலுவையில் உள்ளதா என்பதை AXS இணையத்தளத்தில் சரிபார்த்து உடனடியாகச் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வேளையில், மலேசியாவில் போக்குவரத்துச் சம்மன்களைக் கொண்டுள்ள சிங்கப்பூர் வாகனமோட்டிகளும் எல்லையைக் கடப்பதற்குள் தங்களது நிலுவைகளைச் செலுத்த வேண்டும் என நினைவூட்டப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!