
வாஷிங்டன், அக்டோபர்-16,அமெரிக்காவில் இந்து ஆலயமொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தத் திட்டமிட்டதாகச் சந்தேகிக்கப்படும் 19 வயது இளைஞர் கைதாகியுள்ளார்.
இல்லினாய்ஸ் (Illinois) மாநிலத்தைச் சேர்ந்த Alexandros Paporakis என்ற அந்த இளைஞர், இந்தியர்களைக் கொல்ல விரும்புவதாகத் தனது சக ஊழியர்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
சிக்காகோவுக்கு அருகிலுள்ள அரோரா பகுதியில் அமைந்துள்ள இந்து ஆலயத்தை அவர் குறிவைத்திருக்கலாம் எனப் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
என்றாலும், தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்ட துல்லியமான இடம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
சந்தேக நபரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெள்ளை இன மேலாதிக்கச் சித்தாந்தத்துடன் தொடர்புடைய பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதோடு, இந்தியர்கள், யூதர்கள் மற்றும் கறுப்பின மக்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் ஆவணமொன்றையும் அவர் தயாரித்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சக ஊழியர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் போலீஸார் அவரைக் கைதுச் செய்தனர்.
பயங்கரவாத மிரட்டல் விடுத்தது மற்றும் சட்டவிரோதமாக ஆயுதம் வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள சந்தேக நபர், அக்டோபர் 30-ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த ஆகக் கடைசி சம்பவமானது, அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினருக்கு எதிரான இனவெறி அதிகரித்து வருவது குறித்த கவலையை எழுப்பியுள்ளது.
2024-ஆம் ஆண்டு ஜனவரி முதல் இவ்வாண்டு ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், தெற்காசியர்களுக்கு எதிரான சமூக ஊடக வெறுப்புப் பதிவுகளின் மாதாந்திர எண்ணிக்கை மும்மடங்கு உயர்ந்துள்ளதாக ஆய்வொன்று தெரிவிக்கிறது.



