Latestஉலகம்

அமெரிக்காவில், இரு கருப்பைகளுடன் பிறந்த பெண் ; ஒரு நாள் இடைவெளியில் இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்தார்

அலபாமா, டிசம்பர் 24 – அமெரிக்கா, அலபாமாவில், வியக்கத்தக்க வகையில் இரு கருப்பைகளுடன் பிறந்த பெண் ஒருவர், இரண்டிலும் கர்ப்பமாகி, ஒரு நாள் இடைவெளியில், இரட்டை பெண் குழந்தைகளை பிரசவித்துள்ளார்.

மருத்துவ உலகின் அதிசயமாகவும், கோடியில் ஒரு சம்பவமாக அது கருதப்படுகிறது.

32 வயது கெல்சி ஹாட்சர் ‘Kelsey Hatcher’, தனக்கு ஒருநாள் இடைவெளியில் இரட்டை குழந்தைகள் பிறந்த செய்தியை, தமது இன்ஸ்டாகிராம் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார்.

பர்மிங்காமிலுள்ள, அலபாமா பல்கலைக்கழக மருத்துவமனையில், 20 மணி நேர பிரசவ வலிக்கு பின்னர், ஹாட்சர் அழகிய இரு பெண் குழந்தைகளுக்கு தாயானார்.

இம்மாதம் 19-ஆம் தேதி, செவ்வாய்கிழமை, ஹாட்சர், ராக்சி லைலா ‘Roxi Layla’ எனும் தனது முதல் குழந்தையை பிரசவித்த வேளை ; அதற்கு அடுத்த நாள், டிசம்பர் 20-ஆம் தேதி, புதன்கிழமை, அவருக்கு இரண்டாவதாக, ரிபல் லேகன் ‘Rebel Laken’ எனும் பெண் குழந்தை பிறந்தது.

தாயும், சேய்களும் நலமாக இருப்பதை தொடர்ந்து, வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

உலகில் பெண் ஒருவர் இரு கருப்பைகளுடன் பிறப்பது மிகவும் அரிதாகும். அதுபோன்ற நிலையை மருத்துவர்கள் “uterus didelphys” என குறிப்பிடுகின்றனர்.

உலகில் பிறக்கும் 0.3 விழுக்காட்டு பெண்களுக்கு மட்டுமே மிக அரிதாக அதுபோல இரு கருப்பைகள் இருக்கும் என கூறப்படுகிறது.

ஹாட்சருக்கு 17 வயது இருக்கும் போது, தமக்கு இரு கருப்பைகள் இருப்பது குறித்து தெரிந்து கொண்டார்.

ஏற்கனவே மூன்று பிள்ளைகளுக்கு தாயான ஹாட்சர், இரு கருப்பைகளிலும் ஒரே சமயத்தில் கர்ப்பமாகி, இரட்டை குழந்தைகளை பிரசவித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!