Latestமலேசியா

ஐந்து மாநிலங்களின் வெள்ள நிலவரம்; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரமாக பதிவு

கோலாலம்பூர், டிசம்பர் 28 – இன்று மதிய நிலவரப்படி, கிளந்தான், திரங்கானு, பஹாங், ஜோகூர், சபா ஆகிய ஐந்து மாநிலங்களில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்து 914-ஆக குறைந்துள்ளது.

இன்று காலை மணி எட்டு வாக்கில் பதிவான 28 ஆயிரத்து 32 பேருடன் ஒப்பிடுகையில் அது குறைவாகும்.

அதனால், அந்த ஐந்து மாநிலங்களிலும், செயல்பட்டு வந்த 137 வெள்ள துயர் துடைப்பு மையங்களின் எண்ணிக்கை தற்போது 131-ஆக குறைந்துள்ளதாக, NADMA – தேசிய பேரிடர் நிறுவனத்தின் நடவடிக்கை அறை, ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளது.

கிளந்தானில், செயல்பட்டு வரும் 67 துயர் துடைப்பு மையங்களில், 21 ஆயிரத்து 252 பேர் தங்கியுள்ளனர். பாசிர் மாஸ் மிக அதிகமாக 18 ஆயிரத்து 293 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திரங்கானுவில், 53 துயர் துடைப்பு மையங்களில், ஐயாயிரத்து 359 பேர் தங்க வைக்கப்பட்டுள்ள வேளை ; ஜோகூரில் இன்னும் 63 பேர் மட்டுமே தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

பஹாங்கில் திறக்கப்பட்டுள்ள ஐந்து துயர் துடைப்பு மையங்களில், 209 பேர் அடைகலம் நாடியுள்ள வேளை ; அவர்களில், இன்று காலை கேமரன் மலை நிகழ்ந்த நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட 87 பேரும் அடங்குவர்.

சபாவில், வெள்ள நிலவரத்தில் மாற்றம் இல்லை. அங்கு இன்னும் 31 பேர், இரு வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர்.

இவ்வேளையில், பஹாங்கில், குவந்தான், பெக்கான், ரொம்பின் ஆகிய மாவட்டங்களிலும், ஜோகூரில், செகாமாட், குளுவாங், மெர்சிங், கூலாய், கோத்தா திங்கி, ஜோகூர் பாரு ஆகிய மாவட்டங்களிலும், இன்று நாள் முழுவதும் அடை மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!