கோலாலம்பூர், நவம்பர்-26, அரசாங்க மானியம் கிடைத்த முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத்தலங்களுக்கு, புதிய
விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க மூன்றாண்டுகள் தடை விதிக்கப்படும்.
முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத் தலங்கள் அரசாங்க மானியத்துக்கு விண்ணப்பிப்பது தொடர்பான வழிகாட்டிகளில், வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சு கொண்டு வரவுள்ள உத்தேசத் திருத்தங்களில் அதுவும் ஒன்றாகும்.
துணையமைச்சர் ஐமான் அத்திரா சாபு (Aiman Athirah Sabu) நேற்று மக்களவையில் அதனைத் தெரிவித்தார்.
அரசாங்க மானியத்துக்கு 1,074 முஸ்லீம் அல்லாத வழிபாட்டுத்தலங்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த செப்டம்பர் 30 வரை, அத்தகைய 422 வழிபாட்டுத் தலங்களுக்கு மொத்தம் 46.1 மில்லியன் ரிங்கிட் மானியம் அங்கீகரிக்கப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
இவ்வேளையில், அமைச்சின் அத்திட்டம் நியாயமானதாக இல்லையென, மலேசிய சீனர் சங்கமான ம.சீ.ச அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒருவேளை மானியம் கிடைத்த பிறகு, உடனடி பழுதுபார்ப்பு போன்ற எதிர்பாரா தேவைகள் ஏற்பட்டால் வழிபாட்டுத்தலங்கள் என்ன செய்வது என, ம.சீ.ச உதவித் தலைவர் தான் தெய்க் ச்செங் (Tan Teik Cheng) கேள்வி எழுப்பினார்.
வெறும் கால வரையறை அடிப்படையில் மட்டுமே முடிவெடுப்பது சரிபட்டு வராது; மாறாக நியாயமான அணுகுமுறையை அமைச்சு அறிமுகப்படுத்த வேண்டுமென்றார் அவர்.
உதாரணத்திற்கு, மானியம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன், அதிகாரிகளை அனுப்பி வழிபாட்டுத் தலங்களின் கட்டடங்களை மதிப்பீடு செய்யலாம்.
அதை விடுத்து, ஒரேடியாக மானியம் மறுக்கப்படுவதென்பது கூடாது.
தேவை அறிந்து, அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் அரசாங்கம் ஒரே மாதிரியாக நடத்த வேண்டுமென, தெய்க் ச்செங் கேட்டுக் கொண்டார்.