புத்ராஜெயா, டிசம்பர்-24 – மலாக்கா, ஆயர் குரோ அருகே நேற்றிரவு நிகழ்ந்த கோர விபத்து குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு, சாலைப் போக்குவரத்துத் துறையான JPJ உத்தரவிடப்பட்டுள்ளது.
விபத்தில் சம்பந்தப்பட்ட லாரி மற்றும் பேருந்து நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், JPJ-வின் அமுலாக்கப் பிரிவு பணிக்கப்பட்டிருப்பதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.
அதிகாரத் தரப்பின் தொடக்கக் கட்ட விசாரணையில், 7 பேரை பலி கொண்ட அவ்விபத்துக்கு, லாரியிலிருந்து கழன்று வந்த டயரே முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
அந்த டயரை மோதுவதிலிருந்து தப்பிக்க முயன்ற சுற்றுலா பேருந்து, துரதிஷ்டவசமாக தடம்புரண்டு, எதிர் திசையிலிருந்து வந்த 3 வாகனங்கள் மீது மோதியுள்ளது.
இந்நிலையில், விபத்துக்கான உண்மைக் காரணம் கண்டறிய முழு விசாரணை நடைபெறுமென அந்தோனி லோக் சொன்னார்.
நேற்றிரவு 8.40 மணியளவில், அலோர் காஜா, சிம்பாங் அம்பாட் டோல் சாவடி அருகே, வடக்கு நோக்கிச் செல்லும் PLUS நெடுஞ்சாலையின் 204-வது கிலோ மீட்டரில் அவ்விபத்து நிகழ்ந்தது.
ஒரு சுற்றுலா பேருந்து, லாரி, டிரேய்லர், MPV இரகத்திலான Toyoya Estima கார் மற்றும் Perodua Bezza ஆகிய வாகனங்கள் அதில் சம்பந்தப்பட்டன.
33 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.