கோலாலம்பூர், ஜூலை 18 – சமூக ஊடக தளமான டிக் டொக், தமிழ் உட்பட அனைத்து மொழிகளிலும் பதிவேற்றம் செய்யப்படும் உள்ளடக்கம் மற்றும் நேரலைகளை கண்காணிக்கும் மதிப்பீட்டாளர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.
இணைய பகடிவதையால், சமூக ஊடக பிரபலம் ராஜேஸ்வரி அப்பாஹு எனும் ஏஷா தற்கொலை செய்துக் கொண்ட சம்பவத்தை அடுத்து, அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, தொடர்பு அமைச்சர் பாஹ்மி பட்சேல் தெரிவித்தார்.
அச்சம்பவத்தை, டிக் டொக் கடுமையாக கருதுவதாகவும், வருத்தம் தெரிவித்துள்ளதாகவும் பாஹ்மி சொன்னார்.
இப்பொழுது எல்லாம், டிக் டொக்கில் நள்ளிரவில் தான் அதிகமான நேரலைகள் இடம் பெறுகின்றன.
ஏஷா விஷயத்திலும் அது தான் நிகழ்ந்துள்ளது. அவரை பாதித்த நேரலை அதிகாலை மணி மூன்று முதல் நான்கு வரை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
அதனால், கண்காணிப்பு முறையிலும் மாற்றம் செய்ய வேண்டுமென, டிக் டொக்குடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சு வார்த்தையின் போது தாம் தெரிவித்ததாகவும், அதனை ஏற்றுக் கொண்ட டிக் டொக் கண்காணிப்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இணக்கம் தெரிவித்ததாகவும் பாஹ்மி சொன்னார்.
அதே சமயம், புகார் அடிப்படையில், சமூக ஊடக உள்ளடக்கங்களை, MCMC – தொடர்பு பல்லூடக ஆணையமும் கண்காணிக்கும் என, மக்களவை கேள்வி பதில் நேரத்தின் போது, பாஹ்மி தெரிவித்தார்.