கோலாலம்பூர், நவம்பர்-26, மலேசிய இந்தியச் சமூகத்தின் உயர்வுக்கு குறைந்தது 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட வேண்டும்.
2025 வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கம் ஒதுக்கியுள்ள 130 மில்லியன் ரிங்கிட் நிச்சயம் போதாது என, பெர்சாத்து கட்சியின் முஸ்லீம் அல்லாத உறுப்பினர்களுக்கான Bersekutu பிரிவின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ஆர். சஞ்சீவன் கூறியுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு முன் வாக்குறுதிகளை அள்ளி வீசி விட்டு, தற்போது முந்தைய அரசாங்கம் ஒதுக்கிய அதே 130 மில்லியன் ரிங்கிட்டை பக்காத்தான் தலைமையிலான இந்த ஒற்றுமை அரசாங்கம் நிலை நிறுத்தியுள்ளது.
130 மில்லியன் ரிங்கிட் எந்த மூலைக்கு என அவர் கேள்வி எழுப்பினார்.
இந்தியர்கள் மத்தியில் இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; அரசாங்கம் அதை புறக்கணித்து விட முடியாது என சஞ்சீவன் நினைவுறுத்தினார்.
முன்னதாக 22 இந்திய அரசு சார்பற்ற அமைப்புகள் ஒன்றிணைந்து, சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கும் உரிமைகளுக்கும் எதிர்கட்சியான பெரிக்காத்தான் நேஷனல் உரத்த குரலெழுப்ப வேண்டுமெனக் கேட்டுக் கொண்டன.
நாடாளுமன்றக் கட்டடத்தில், தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினரும் பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினருமான வான் சைஃபுல் வான் ஜானுடன் (Wan Saiful Wan Jan) நடந்த அச்சந்திப்பில், இந்தியச் சமூகத்தின் பொருளாதார உயர்வுக்கான ஆலோசனைகளும் செயல்திட்டங்களும் முன்வைக்கப்பட்டன.
அது குறித்து கருத்துரைத்த போது டத்தோ ஸ்ரீ சஞ்சீவன் மேற்கண்டவாறு கூறினார்.
வான் சைஃபுலுடனான சந்திப்பில், இந்தியர்களின் மேம்பாட்டை உறுதிச் செய்ய, எதிர்கட்சியும் ஒரு தீர்க்கமான திட்டத்தைக் கொண்டிருக்க வேண்டுமென அவ்வமைப்புகள் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.