Latestமலேசியா

இந்திய சமூகத் தலைவர்கள் தீவிர உணர்வுகளை தவிர்க்க வேண்டும் – பிரதமர் அன்வார் வலியுறுத்து

கிள்ளான், ஜன 21 – இந்திய சமூகத் தலைவர்கள் தீவிர உணர்வுகளை தவிர்க்க வேண்டும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டார். இத்தகைய உணர்வுகள் எந்த வகையிலும் நன்மையை கொண்டுவராது என அவர் வலியுறுத்தினார். எதனையும் நடைமுறைப்படுத்தாமல் வெறுமனே பேசக்கூடியதாக தமது அரசாங்கம் இல்லையென நேற்று கிள்ளான் செட்டி மைதானத்தில் சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களிடையே உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார். நாட்டிலுள்ள ஒவ்வொரு சமூகத்திடமிருந்தும் அரசாங்கம் பல கோரிக்கைகளை பெற்று வருகிறது. அனைவருக்கும் நியாயமாக நடந்துகொள்வதன் மூலம் மடானி உணர்வை நாங்கள் நிலைநிறுத்துவோம். நான் இதைச் சொல்லும்போது, ​​​​அது எளிதானது அல்ல, ஏனென்றால் என் இனத்தைச் சேர்ந்த சிலர் எங்களைத் சாடுகின்றனர் என அன்வார் விவரித்தார்.

நான் அவர்களுக்கு நியாயமாக இல்லை என்றும் மற்ற இனங்களுக்கு மட்டுமே விட்டுக்கொடுக்கிறேன் என்ற குற்றச்சாட்டை அவர்கள் என் மீது வைக்கின்றனர். இது குறித்து நான் பதில் சொல்லவோ அல்லது கவலைப்படவோ இல்லை. அனைத்து சமூகங்களும் சமமாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும், எதிர்கொள்ளவும் தனது அரசாங்கம் பாடுபடுகிறது என்றும் அவர் கூறினார். இந்திய சமூகம் எதிர்கொள்ளும் வறுமை போன்ற பிரச்சனைகள் ஒரு இனப் பிரச்சனை அல்ல, மாறாக தேசிய பிரச்சனை என்றும் அன்வார் கூறினார்.

ஒவ்வொரு ஏழை இந்தியனும் என் பிரச்சனை. இது ஒரு இந்தியப் பிரச்சனை அல்ல. இது ஒரு தேசியப் பிரச்சனை என்று கூறிய அன்வார், இந்த விவகாரத்தை தீர்க்க அரசாங்கம் மிகவும் கடுமையாக முயற்சி செய்து வருகிறது என்றார். உலகெங்கிலும் பல நாடுகள் மலேசியா போன்று பல்வேறு இனங்கள் மற்றும் சமயங்களை கொண்டிருந்தாலும் அந்நாடுகள் ஒற்றுமையையும் அமைதியையும் அனுபவிக்கவில்லை. எனவே நாடு முன்னேறுவதற்கு இந்த ஒற்றுமையும் அமைதியும் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்றும் அன்வார் வலியுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் சிலாங்கூர் மந்திரிபெசார் டத்தோஸ்ரீ அமிருதீன் ஷாரி , ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் , சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பராயுடு, கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் உட்பட பல பிரமுகர்களும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!