உத்தரகாண்ட், ஆகஸ்ட் -24 – இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் மனைவியின் இன்ஷூரன்ஸ் (காப்புறுதி) பணத்திற்காக, ஊசி வாயிலாக அவரது உடலில் பாம்பின் விஷத்தை ஏற்றி கொலைச் செய்துள்ளான் கொடூர கணவன்.
சுபம் சௌத்ரி – சலோனி இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கணவனுக்கு வேறொரு பெண்ணுடன் கள்ள உறவு இருப்பது அம்பலமாகி அவர்கள் வாழ்க்கையில் புயல் வீசத் தொடங்கியது.
அதிலிருந்து சலோனியை மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் கணவன் சித்ரவதை செய்து வந்துள்ளான்.
பல முறை பஞ்சாயத்து செய்து வைத்தும் அவன் திருந்தவில்லை.
இதனால் விவாகரத்து செய்யும் முடிவிலிருந்த சலோனி, ஆகஸ்ட் 11-ம் தேதி மர்மமான முறையில் இறந்து போனார்.
தொடக்கத்தில் சந்தேகத்திற்குரிய மரணமாக அது வகைப்படுத்தப்பட்டது.
எனினும், சலோனியின் உடலில் பாம்பின் விஷம் ஏற்றப்பட்டது சவப்பரிசோதனையில் கண்டறியப்பட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து சுபம், உடந்தையாக இருந்த அவனது பெற்றோர் மற்றும் இன்னொரு நபர் மீது கொலை வழக்குப் பதிவுச் செய்து போலீஸ் விசாரித்து வருகிறது.
கடந்த மாதம் மனைவியின் பெயரில் 25 லட்சம் ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் பாலிசிக்கு விண்ணப்பித்து, தன் பெயரை அவன் வாரிசுத்தாரராகப் போட்டுக் கொண்டதும் விசாரணையில் அம்பலமானது.