Latestமலேசியா

இறைச்சியை உட்கொண்டால் உடல் பருமன் ஆகுமா?; மாணவரின் பயிற்சி புத்தகம் சமூக ஊடகத்தில் விவாதத்தை தூண்டியுள்ளது

கோலாலம்பூர், ஜனவரி 30 – இளம் மாணவர்களுக்கான பயிற்சி புத்தகத்தில் இடம்பெற்றுள்ள கேள்வி ஒன்றால், இணைய பயனர்கள் பலர் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

அண்மையில், உளவியல் பேராசிரியர் டாக்டர் சித்தி ரவுட்சா கசாலி என்பவர் தமது @sitiraudzah எனும் X சமூக ஊடகத்தில் பதிவிட்ட அந்த கூற்று வைரலாகி விவாதத்தை தூண்டியுள்ளது.

அப்படி என்ன தான் அவர் பதிவிட்டுள்ளார் என்கிறீர்களா?

யுனிமாஸ் எனும் மலேசிய சரவாக் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான சித்தி, உயர் சிந்தனை ஆற்றலை தூண்டுவதற்கு பயன்படுத்தப்படும் புத்தகம் ஒன்றின் பக்கத்தை தான் பகிர்ந்துள்ளார்.

அந்த பக்கத்தில், உணவு பழக்க வழக்கத்தின் அடிப்படையில், லிசா எனும் பெண்ணின் உடல்வாகை தேர்வுச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

லிசாவிற்கு இறைச்சு உணவு என்றால் மிகவும் பிடிக்கும். காய்கறிகளை அவர் விரும்புவதில்லை. அதனால், அவர் எந்த ரகத்தை சேர்ந்த பெண் என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதற்கு, அவர் ஒல்லியான வயதான பெண், பொழிவான இளம் பெண், பருமனான பெண் அல்லது நோயுற்ற பெண் என நான்கு தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அந்த கேள்விக்கு சரியான பதில், அவர் பருமனான பெண் என்பதே, சமூக ஊடக பயனர்கள் பலரை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.

“இது என்ன லாஜிக்? இறைச்சி சாப்பிட்டால் உடல் எடை கூடுமா?” என இணையப் பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ள வேளை ;

“இதுபோன்ற கேள்விகளில் இருந்து மாணவர்கள் என்ன கற்றுக் கொள்ள முடியும் என நினைக்கிறீர்கள்?” என மற்றொருவர் சினத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

“பருமனாக இருப்பவர்களிடம் பாகுபாட்டுடன் நடந்து கொள்ளுமாறு நம் பிள்ளைகளுக்கு கற்றுத் தரப்படுகிறா?” எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவ்விவகாரத்தை ஆராய்ந்து, மாணவர்கள் தரமான கல்வியை பெறுவதை உறுதிச் செய்ய வேண்டுமெனவும், பலர் வலியுறுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!