கோலாலம்பூர், ஆகஸ்ட் 30 –அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் சார்ந்த துறைகளில் பயிலாத மற்றத் துறை மாணவர்களும் இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு கல்வித் திட்டத்தைக் கற்க அனைத்துப் பல்கலைக்கழகங்களும் வாய்ப்பினை வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார்.
பல மாபெரும் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீட்டைத் தொடர்ந்து தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய பொறியியலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனைகளைப் பூர்த்தி செய்வதற்கு இத்திட்டம் உறுதுணையாக இருக்கும் என்றார், அவர்.
முன்பு அறிவியல், கணிதம் போன்ற துறைகளில் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்வித் திட்டத்தைத் தொடர முடியும் என்று கருதப்பட்டது.
ஆனால் தற்போது இலக்கியம் போன்ற மற்றத் துறை மாணவர்களும் இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு தொடர்பான கல்வியைப் பயில வேண்டிய தேவை உள்ளது என்று பிரதமர் அன்வார் விவரித்தார்.
இதனிடையே, இந்தியாவுக்கான பயணத்தின் போது அனைத்து இலக்கவியல், செயற்கை நுண்ணறிவு நிபுணர்களும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறிய ஒரு நிறுவனத்தைத் அவர் சுட்டிக் காட்டினார்.
இந்த திட்டமானது, நாட்டின் தொழில்துறைக்கு உறுதுணையாக இருக்கும் என்று பேராக் கெரியனில் பசுமைத் தொழில் பூங்காவின் (KIGIP) அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டுபோது இவ்வாறு கூறினார்.