
புத்ராஜெயா, அக்டோபர்-16
பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் இரண்டாம் படிவ மாணவன், நான்காம் படிவ மாணவியை சமாரியாகக் கத்தியால் குத்திக் கொலைச் செய்த சம்பவத்தில் பழிபோடுதல் கூடாது.
அச்சம்பவம் உண்மையில் பெற்றோர்கள், ஆசிரியர்கள், சமூகம் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட அனைவரும் இணைந்து இளைஞர்களின் சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்கான நினைவூட்டலாகும்.
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி அதனை வலியுறுத்தியுள்ளார்.
அன்பு, அக்கறை மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை தான் இன்றைய இளம் தலைமுறையை பாதுகாக்கவும் வழிகாட்டவும் முக்கியமான அடிப்படைக் கூறுகளாகும் என்றார் அவர்.
இந்த துயரச் சம்பவங்களை துச்சமாக எண்ணி நாம் அப்படியே கடந்துபோய் விட முடியாது; அவை இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமூக அழுத்தங்களைக் காட்டுகின்றன.
ஆகவே, பெற்றோர்களை தங்கள் குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருந்து, ஒழுக்கம், மரியாதை மற்றும் அன்பை விதைத்து, நல்ல பண்புகள் கொண்ட தலைமுறையை உருவாக்குமாறும் அமைச்சர் வலியுறுத்தினார்.