இவானா ஸ்மிட்டின் மரண வழக்கு; 48 மணி நேரத்தில் இவானாவின் தாய்க்கு RM1.1 மில்லியன் தொகையைச் செலுத்த உத்தரவு

கோலாலம்பூர், நவம்பர் 14 – நெதர்லாந்து மாடல் இவானா ஸ்மிட்டின் மரணம் தொடர்பான வழக்கில், அவரது தாய் கிரிஸ்டினாவிற்கு வழங்கவேண்டிய RM1.1 மில்லியன் இழப்பீட்டை அரசு அடுத்த 48 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு அப்பணத்தைச் செலுத்த தவறினால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படுமென்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்று, அரசின் ஒத்திவைப்புக் கோரிக்கையை நிராகரித்து, இழப்பீடும் அதற்கான வட்டியையும் உடனடியாக செலுத்த வேண்டுமென்று கட்டளையிடப்பட்டது.
2017-ல் 18 வயதான இவானா கோலாலம்பூரில் உள்ள Cap Square Residence-ன் 20-ம் மாடியிலிருந்து கீழே விழுந்து இறந்தார். ஆரம்பத்தில் இது “திடீர் மரணம்” என போலீஸ் முடிவுசெய்திருந்தது. பின்னர் போலீசின் கடமையின்மை மற்றும் விசாரணை தவறுகள் கண்டறியப்பட்டது.
மேலும் குற்றஞ்சூழல் பாதுகாப்பு, ஆதாரம் சேகரிப்பு, மற்றும் வெளிநாட்டு தம்பதியரான Alex Johnson – Luna Almazkyzy மீதான விசாரணைகளிலும் குறைபாடுகள் இருந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது.



