
ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 21 – இஸ்லாம் மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதை ஒப்புக்கொண்ட 56 வயதான சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த பாதுகாப்பு காவலருக்கு, மாஜிஸ்திரேட் நீதிமன்றம் 14 நாட்கள் சிறைத்தண்டனையும் 7,000 ரிங்கிட் அபராதமும் விதித்துள்ளது.
அந்த நபர், கடந்த ஜூலை 30ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஜாலான் துன் ரசாக் முதல் ஜாலான் மெல்ட்ரம் (Jalan Tun Razak – Jalan Meldrum) வரையிலான பகுதியில் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காவலில் இருந்த காலத்தையும் சேர்த்து 14 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் மூன்று மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும்.
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து, ஜோகூர் பாரு செலாத்தான் மாவட்ட காவல்துறை மற்றும் சிங்கப்பூர் காவல்துறையின் உதவியுடன் அவர் கைது செய்யப்பட்டார்.



